மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்தி வந்தவர் கைது; வாலிபருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி தோப்பு தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி அருள்மணி (வயது65). இவர்களது மகன் ஜெயசீலன் (27). இந்தநிலையில் ஜெயசீலன் தனது தாயுடன் மோட்டார்சைக்கிளில் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருவிளையாட்டம் மெயின்ரோட்டில் சென்ற போது எதிரே சாக்குமூட்டைகளுடன் 2 பேர் வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஜெயசீலன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயசீலன், அவரது தாய் அருள்மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் ஒருவர் லேசான காயத்துடனும், மற்றொருவர் காயமின்றியும் தப்பினர்.
தகவலறிந்த பெரம்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தை ஏற்படுத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் கொண்டுவந்த சாக்கு மூட்டைக்குள் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இந்தநிலையில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் குத்தாலம் அருகே வானாதி ராஜபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த சுந்தர் (47) என்பதும், தப்பி ஓடியவர் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன் (37) என்பதும் தெரியவந்தது. மேலும் 2 பேரும் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் தப்பி ஓடிய ஜெயசீலனை வலைவீசி தேடி வருகின்றனர்.