15 வயதில் குழந்தை பெற்ற சிறுமி, ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
கோவை அருகே 15 வயதில் சிறுமி குழந்தை பெற்றார். அவரை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பேரூர்,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கோவை கே.ஜி. சாவடியில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் பெயிண்டர் கார்த்திக்(வயது23) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். பின்னர் சிறுமியை கார்த்திக், பழனிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து கேரள மாநிலம் வாளையாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.
வாளையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை கோவை கே.ஜி. சாவடி போலீசுக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி, 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கார்த்திக் மீது போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். சிறுமியையும், குழந்தையையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.