சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2019-09-02 22:00 GMT
புதுக்கோட்டை, 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவில் அருகே உள்ள பல்லவன் குளம் கிழக்கு கரையில் உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகர் கோவிலில் காலையில் கிருஷ்ண விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல மேல ராஜவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில், பெரியார்நகர், கம்பன்நகர், கோவில்பட்டியில் உள்ள விநாயகர் கோவில்கள் உள்பட நகரில் அனைத்து பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை பெரியார்நகர், வடக்கு 4-ம் வீதி, கீழராஜவீதி, தெற்கு 3-ம், 4-ம் வீதி, மாப்பிள்ளையார்குளம், காந்திநகர் உள்பட 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவரங்குளம் தீட்டிவாசல் பிள்ளையார்கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல வல்லத்திராக்கோட்டை, பூவசரக்குடி, கைக்குறிச்சி, வம்பன் 4 ரோடு, கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரனூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோட்டைமேடு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல கீரனூர் சிவன் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல குளத்தூர் பகுதியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு விளம்பர பதாகைகளை வைத்து கொண்டாடி வருகின்றனர். கீரனூர் பகுதியில் கடந்த 9 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த ஆண்டு 4 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரிமளம் ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரிமளம், ஒணாங்குடி, சத்திரம், சீகம்பட்டி கே.புதுப்பட்டி, கீழா நிலைகோட்டை, கல்லூர் உள்ளிட்ட 28 கிராமங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பாடு நடத்தி வருகின்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விராலிமலை காமராஜ்நகர், ரத்னா கார்டன், தெற்குதெரு, மாத்தூர், மண்டையூர், நீர்பழனி, ஆலங்குடி, பேராம்பூர் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோல ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்