‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: தென்கரை வாய்க்காலில் குப்பைகள் அகற்றம்

தினத்தந்தி’செய்தி எதிரொலி காரணமாக தென்கரை வாய்க்காலில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது.

Update: 2019-09-02 22:15 GMT
குளித்தலை, 

கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து தொடங்கி லாலாபேட்டை, குளித்தலை, மருதூர் பகுதி வழியாக திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வரை தென்கரை வாய்க்கால் செல்கிறது. வறட்சியின் காரணமாக இந்த வாய்க்காலில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தண்ணீர் இல்லை. தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி, மாயனூர் தடுப்பணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வாய்க்கால் முழுமையாக தண்ணீர் செல்கிறது. தண்ணீர் திறந்த பிறகு இந்த வாய்க்காலில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள், குச்சிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் அனைத்தும் குளித்தலை 7- வது வார்டு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே தென்கரை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள சிறிய நடைபாலம் அருகே தேங்கியது. மேலும், இப்பாலத்தையொட்டி பொதுமக்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படித்துறை முழுவதும் இந்த குப்பைகள் தேங்கி நின்றது. இதனால், இந்த வாய்க்காலில் இப்பகுதி மக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை, ‘தினத்தந்தி’ நகர்வலம் பகுதியில் நேற்று படத்துடன் பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை சார்பில் தென்கரை வாய்க்காலில் தேங்கிய குப்பைகள் நேற்று அகற்றப்பட்டது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், படத்துடன் செய்தி பிரசுரித்து உதவிய ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்