புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-09-02 22:30 GMT
நெல்லை, 

அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள ஆசிரியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சாம் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பிச்சைகனி வரவேற்று பேசினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் குமாரவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாணவர்கள் நலன், ஆசிரியர் நலன் மற்றும் சமூக நீதிக்கு முரணாக உள்ள புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தொடக்க கல்வியை பாதிக்கும் அரசாணை 145-ஐ ரத்து செய்ய வேண்டும், குறு வள மையங்களை மேல்நிலைப்பள்ளிகளோடு இணைப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பணி மாறுதல் வழங்கிய ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். காவல்துறையால் புனையப்பட்ட குற்றவழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வருகிற 13-ந் தேதி நெல்லை, தென்காசி, சேரன்மாதேவி, வள்ளியூர், சங்கரன்கோவில் ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் பேரணி நடத்துவது. வருகிற 24-ந் தேதி மாவட்ட தலைநகரத்தில் உண்ணாவிரதம் இருப்பது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், உயர்மட்ட குழு உறுப்பினர் கோமதிநாயகம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நந்தகுமார், சீனிவாசன், இசக்கிமுத்து, எடிசன் பவுல், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்