தூத்துக்குடியில், வாலிபர்களுக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது

தூத்துக்குடியில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-02 21:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சூடாமணி மகன் சுடலைமணி (வயது 20) பெயிண்டர். இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தான் கைது செய்யப்பட்டதற்கு அதே பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் குடும்பத்தினர் தான் காரணம் என சுடலைமணி நினைத்து வந்தார். இதனால் அதற்கு பழித்தீர்க்க சுடலைமணி காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுடலைமணி தனது கூட்டாளிகளான ராஜேஷ் கண்ணன், மணிகண்டன் (19), கே.வி.கே. நகரை சேர்ந்த மகாராஜன், அண்ணா நகர் 10-வது தெருவை சேர்ந்த நாகராஜ் (19), பாலாஜி ஆகியோருடன் மதுகுடித்து கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மாரியப்பனின் மகன் லட்சுமணன் (23), அவருடைய நண்பர் மகேஷ்குமார் (25) ஆகியோர் வந்தனர். இதனை பார்த்த சுடலைமணி உள்ளிட்டவர்கள், 2 பேரிடம் தகராறு செய்து தாங்கள் வைத்து இருந்த கத்தியால் 2 பேரையும் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன், மகேஷ்குமார் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சுடலைமணி உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்