திருவண்ணாமலையில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு: ரசாயன விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தடை
திருவண்ணாமலையில் வருவாய்த்துறையினர் திடீரென ஆய்வு செய்தபோது ரசாயன விநாயகர் சிலைகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிலைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காஞ்சி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வெளி மாநிலத்தவர்கள் சிலர் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சிலைக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர். அதன்படி, அவர்கள் 3 அடி முதல் 7 அடி வரை 20-க்கும் மேற்பட்ட சிலைகளை செய்து உள்ளனர்.
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை தாசில்தார் அமுல் தலைமையிலான வருவாய்த்துறையினர் விநாயகர் சிலைகள் செய்யும் இடங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் ரசாயனம் கலந்த சிலைகள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.
அப்போது காஞ்சி சாலையில் வெளி மாநிலத்தவர்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் அதிகளவில் ரசாயன கலவைகள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தாசில்தார் அமுல் அந்த சிலைகளை விற்பனை செய்ய தடை செய்து உத்தரவிட்டார்.
நேற்று மதியம் விநாயகர் சிலைகள் செய்ய முன்பணம் கொடுத்தவர்கள் சிலைகளை வாங்க அங்கு வந்தனர். அப்போது விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இளைஞர்கள் பலர் அங்கு குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சிலர் விநாயகர் சிலைகள் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே, இவர்கள் சட்ட விதிப்படி விநாயகர் சிலைகள் செய்கிறார்களா? என்று 2 நாட்களுக்கு முன்பே வந்து அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் தற்போது ஆய்வு செய்தால் என்ன நியாயம் இருக்கிறது.
நாங்கள் எங்கள் பகுதியில் பந்தல் அமைத்துவிட்டு விநாயகர் சிலைகள் வாங்க வந்து பார்த்தால், அதிகாரிகள் சிலைகளுக்கு தடை செய்து உள்ளனர். இனி நாங்கள் எங்கு சென்று சிலை வாங்குவோம் என்று புலம்பியவாறு சிலர் அங்கிருந்து சென்றனர்.
திருவண்ணாமலை தாலுகா பகுதியில் ரசாயனம் கலந்த 250 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகா ரிகள் தெரிவித்தனர்.
இதேபோல ஆரணி நகரிலும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யும் இடங்களில் வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, தாசில்தார் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.