விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - 1,800 சிலைகள் மட்டும் வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,800 விநாயகர் சிலைகள் மட்டும் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
கோவை,
விநாயகர் சதுர்த்தி விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளை பல்வேறு இந்து அமைப்புகள் செய்து வருகின்றன. அதன்படி கோவை மாநகரில் 400 விநாயகர் சிலைகளும், புறநகரில் 1,400 சிலைகளும் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகரில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களுக்கு நேற்று முன்தினம் முதல் லாரி மற்றும் வேன்களில் விநாயகர் சிலைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. எந்தெந்த இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஏற்கனவே அமைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த இடங்களில் சிறிய கொட்டகை அமைத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலையில் சிறப்பு பூஜைகள் செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. சிலைகள் அதிகபட்சமாக 11 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் ஒரு போலீஸ்காரர் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இது தவிர அந்த பகுதியில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் போலீசார் ரோந்து சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களிலேயே தற்போது சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் கோவை மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் என ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல புறநகரில் பாதுகாப்பு பணியில் 900 போலீசார் கண்காணிபபில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்தந்த போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் தினமும் 3 வேளை பணிபுரிவார்கள். ஊர்வலம் நடைபெறும் நாள் வரை இது நீடிக்கும். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.