அரசு கேபிள் டி.வி. தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கைது

அரசு கேபிள் டி.வி. தாசில்தாரை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-01 21:45 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவில் அருகே அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சில் இருந்து தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முறைகேடாக இணைப்பு பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் காஞ்சீபுரம் தனி தாசில்தாரான லோகநாதன், தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இந்த முறைகேடான இணைப்பை துண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் லோகநாதனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததுடன், அவரை கண்டித்து செங்கல்பட்டு பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி லோகநாதன் அளித்த புகாரின்பேரில் செங்கல்பட்டு நகர போலீசார், தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களான குப்பன் (வயது 40), சசிகுமார் (40), பாலமுருகன் (41), பிரதீப்குமார் (29), சுனில்குமார் (38), கண்ணன் (33), கார்த்திகேயன் (33), சந்தானகிருஷ்ணன்(36) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்