தனித்தனி சம்பவத்தில், பெண் உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் கண்ணன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அர்ச்சனா. கண்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் இவர் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த அர்ச்சனா கடந்த 4 மாதத்துக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று தங்கினார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணன் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து அர்ச்சனா அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுசீலா (48), இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.