சட்ட விரோதமாக முன்பதிவு: சென்னை கோட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் - 11 பேர் கைது

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான சட்ட விரோதமாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-09-01 22:45 GMT
சென்னை,

ரெயில்வே நிர்வாகத்தில் முறையாக பணம் செலுத்தாமல், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் சட்ட விரோதமாக டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அந்த டிக்கெட்டை பயணிகளிடம் அதிக விலைக்கு விற்பதாக நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அந்தவகையில் ரெயில்வே அமைச்சகம், இத்தகைய குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து நாடெங்கும் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை கோட்டத்தில் ரெயில்வே மூத்த கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், சென்னை கோட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் மற்றும் டிராவல்ஸ் வைத்து டிக்கெட் விற்பனை செய்யும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் சட்ட விரோதமாக டிக்கெட் முன்பதிவு செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 11 ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் ரெயில்வே சட்டம் 143 பிரிவின் கீழ் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு கூடுதலாக ரூ.50-ம், ஏ.சி.பெட்டியில் முன்பதிவு செய்ய கூடுதலாக ரூ.100-ம், தட்கல் முறையில் முன்பதிவு செய்ய கூடுதலாக ரூ.150-ம் வசூலித்து விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து, தாம்பரத்தில் ரூ.8 ஆயிரத்து 410 மதிப்புள்ள விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்து டிக்கெட்டுகளும், மாம்பலத்தில் ரூ.63 ஆயிரத்து 685, கடற்கரையில் ரூ.84 ஆயிரத்து 265 மதிப்புள்ள டிக்கெட்டுகள் என 11 இடங்களில் ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 835 மதிப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள் மற்றும் காலாவதியான டிக்கெட்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக டிக்கெட் முன்பதிவு செய்து, அதிக விலைக்கு விற்றதாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்பிலான விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள், டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்திய கணினி, செல்போன்களை ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பறிமுதல் செய்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்