உளுந்தூர்பேட்டையில், பள்ளத்தில் கார் கவிழ்ந்து டாக்டர் பலி

உளுந்தூர்பேட்டையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் டாக்டர் பலியானார்.

Update: 2019-08-31 22:15 GMT
உளுந்தூர்பேட்டை, 

சென்னை ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 50), டாக்டர். இவர் தனது குடும்பத்துடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை அரவிந்தன் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். காரை அரவிந்தன் ஓட்டினார்.

நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவரது மனைவி மற்றும் மகன் லேசான காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான அரவிந்தன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்