மோட்டார்சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - நண்பர் படுகாயம்
மோட்டார்சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர், சதீஷ்குமாரின் நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று வேலையை முடித்து கொண்டு சதீஷ்குமார், செந்தில்நாதன் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். உத்தனப்பள்ளி அருகே உள்ள துப்புகானபள்ளி என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில், சதீஷ்குமார், செந்தில்நாதன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் சதீஷ்குமார் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்நாதன் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.