மருந்து விற்பனை பிரதிநிதி கார் மோதி பலி திருமணமான 5 மாதத்தில் பரிதாபம்

மருந்து விற்பனை பிரதிநிதி கார் மோதி பரிதாபமாக இறந்தார். அவருக்கு திருமணமாகி 5 மாதமே ஆகிறது.

Update: 2019-08-31 22:15 GMT
திருச்சி,

திருச்சி-திண்டுக்கல் சாலையில் தீரன்நகர் அருகே உள்ள சேரன்சாலையை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 24). ஒரு தனியார் மருந்து கம்பெனியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உதயகுமார் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கருமண்டபம் சக்திநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட உதயகுமார் படுகாயம் அடைந்தார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதைக்கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு அந்த வழியாக வந்த ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, உதயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஒரு வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது கேமராவில், சம்பவம் நடந்தபோது அந்த வழியாக ஒரு கார் மின்னல் வேகத்தில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் காரின் பதிவு எண் சரியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்