விளையாட்டுக்கு தனி வாரியம் அமைக்கவேண்டும் - செல்வகணபதி எம்.எல்.ஏ. கோரிக்கை

விளையாட்டு துறைக்கு தனி வாரியம் அமைக்கவேண்டும் என்று செல்வகணபதி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

Update: 2019-08-31 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. செல்வகணபதி எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

செல்வகணபதி: விளையாட்டு கழகம் யாரிடம் உள்ளது? விளையாட்டுத்துறைக்கும், கல்வித்துறைக்கும் தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கும்போது விளையாட்டு கழகத்தை ஏன் தனியாக பிரிக்கவில்லை?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: விளையாட்டுத்துறை அமைச்சர்தான் விளையாட்டு கழகத்துக்கு தலைவர். விளையாட்டு துறைக்கென தனி அமைச்சகம் அமைப்பதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியில் இருந்துபோதுமான நிதி மானியமாக விளையாட்டு கழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது. விளையாட்டுக் கழகங்களுக்கும் நிதி தரப்படுகிறது. கழகத்தின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி நடைபெற உத்தேசிக்கப்பட்டு நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. அந்த கூட்டம் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்வகணபதி: விளையாட்டுத்துறைக்கு என தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். விளையாட்டு போட்டிகளில் நமது வீரர்கள் பல வெற்றிகளை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதில்லை.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: 2018-19ல் விளையாட்டு வீரர்களுக்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். வீரர்கள் வெளிநாடு சென்றால் அதற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி கொடுக்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்