6 ஊருணிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி - கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் 6 ஊருணிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-31 22:00 GMT
சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்பவர்கள், வழிபாடு முடிந்து சிலைகளை கீழ்க்கண்ட இடங்களில் கரைக்க அரசாணையின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை அலங்காரக்குளம், இளையான்குடி சாலையம்மன்குளம், காரைக்குடி சிவன்கோவில் ஊருணி, தேவகோட்டை சிலம்பணி ஊருணி, சிங்கம்புணரியில் உள்ள சிங்கம்புணரி ஊருணி ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்கலாம்.

பூஜைக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களி மண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும். வேறு எந்த ரசாயன கலவையும் பயன்படுத்த கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் தற்காலிக அமைப்புகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களால் அமைக்க கூடாது. உள் மற்றும் வெளிச்செல்லும் வழிகளுடன் பந்தல்கள் அமைக்கப்பட வேண்டும். உரிய தீயணைப்புக் கருவிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

வழிபாட்டிற்கு அமைக்கப்படும் பீடம் மற்றும் சிலை ஆகியவற்றின் மொத்த உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. சிலை வைக்குமிடத்தில் காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் மட்டுமே பாக்ஸ் டைப் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிலை வைக்குமிடத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சாதித் தலைவர்களின் பெயர் பலகைகள் வைக்கக் கூடாது. சிலை அமைப்பாளர்கள் சிலை பாதுகாப்பிற்காக 2 நபர்களை அவர்களது சொந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும். பிற மதத்தினர் மனம் புண்படும்படியான சுலோகங்களையோ, வாசகங்களையோ பயன்படுத்தக் கூடாது.

காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித்துறை ஆகியவற்றால் அனுமதிக்கப்படும் இடங்களிலேயே சிலைகளை அமைக்க வேண்டும். மேலும், சிலை அமைத்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகளை கரைக்க வேண்டும். மாவட்டத்தில் ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு முன்பும், கரைத்த பின்பும் நீரின் தன்மையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதனை செய்ய வேண்டும்.

விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு 4 சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்த அனுமதியில்லை. சிலை வைக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமரா வைத்து சிலைகளை கண்காணித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்