காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரம் விரைவில் தூர்வாரப்படும் - வைத்திலிங்கம் எம்.பி. உறுதி
காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரம் விரைவில் தூர்வாரப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
காரைக்கால்,
காரைக்காலுக்கு நேற்று வைத்திலிங்கம் எம்.பி. வந்தார். காரைக்கால் ரெயில் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் விக்ராந்த் ராஜாவுடன் காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை பணி மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் வைத்திலிங்கத்தை பலர் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
கூட்டத்தின் முடிவில், வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காரைக்கால்- பேரளம் ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள், தேவைகள் குறித்து மாவட்ட கலெக்டர் என்னிடம் விளக்கமாக கூறினார். காரைக்கால் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தபோது, 4-வது நடைமேடை அமைக்க வேண்டும், ரெயில் என்ஜினை திருப்புவதற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திதர வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ரெயில் பயணிகள் சார்பிலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருச்சி கூட்டத்தில் பேசுவதோடு, மத்திய ரெயில்வே துறை மந்திரியிடமும் எடுத்துக் கூறுவேன்.
காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார கோரி, விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் முகத்துவார பகுதி தூர்வாரப்படும். அதேபோல், எனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் காரைக்காலில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.
நிதி நெருக்கடிக்கு மத்தியில், அரசுத்துறை, தொழிற்சாலை நிர்வாகம், கோவில் நிதியில் காரைக்காலில் இதுவரை சுமார் 120 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக அறிந்தேன். பாராட்டுக்குரிய இந்த விஷயத்தில், குளங்களை தூர்வாருவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு விரைவில் நிதி வழங்கப்படும்.
பக்ரைன் நாட்டில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் அக்கம்பேட்டையை சேர்ந்த மீனவரை மீட்க மாவட்ட நிர்வாகமும், புதுச்சேரி முதல்-அமைச்சரும் உரிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கலெக்டர் விக்ராந்த் ராஜா, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.