திருப்புல்லாணி அருகே அரசு ஊழியர் மர்ம சாவு: தோப்பில் பிணமாக கிடந்தார்

திருப்புல்லாணி அருகே அரசு ஊழியர் மர்மமான முறையில் தோப்பில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-08-30 23:41 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தெற்கு வண்ணாங்குண்டு அய்யனார்கோவில் அருகில் உள்ள தோப்பு ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக திருப்புல்லாணி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதில், இறந்தவர் வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்த கனகராஜ்(வயது 50) என்பதும், இவர் அப்பகுதியில் கேபிள் டி.வி. தொழில் செய்து வந்ததோடு, ராமநாதபுரம் குழந்தைகள் நல குழும உறுப்பினராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இவருக்கு திருமணமாகி சண்முகபாலமதி என்ற மனைவியும், நம்புநிஷாந்தினி(17) என்ற மகளும், கவிநிஷாந்த்(14) என்ற மகனும் உள்ளனர். கடந்த 27-ந்தேதி காலை வீட்டில் இருந்து சென்ற கனகராஜ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் இவரை கொலை செய்து வீசி சென்றனரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே கனகராஜ் இறந்ததற்கான முழுகாரணமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்