ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரியை நீக்க வேண்டும்: அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு தீர்மானம்

ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரியை நீக்க வேண்டும் என்று அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-08-30 23:33 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெகதீசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சி.பாலகிருஷ்ணன், பொருளாளர் சி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ‘பொலிவுறு நகரமாகும் ஈரோடு - நமது பார்வை’ என்ற தலைப்பில் கே.கே.எஸ்.கே.ரபீக், யு.ஆர்.சி.தேவராஜன், எஸ். குமுதா ஆகியோரும், ‘ஈரோட்டின் துணி வணிகத்திற்கான உள்கட்டமைப்பு - நமது தேவை’ என்ற தலைப்பில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கோவை மண்டல இணை இயக்குனர் எம்.பாலசுப்பிரமணியன், இந்து கல்வி நிலைய தாளாளர் கே.கே.பாலுசாமி, எம்.சி.ஆர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சி.ராபின் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரு சக்கர, 4 சக்கர வாகன நிறுத்தும் இடம், ரிங்ரோடு, ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பிரப் சாலையை இணைக்கும் 80 அடி திட்ட சாலை போன்ற திட்டங்களை சேர்க்க வேண்டும்.

ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதம் வரியை நீக்க வேண்டும். அதிகபட்ச வரியாக 18 சதவீதம் மட்டுமே விதிக்கப்பட வேண்டும்.

அனைத்து வகையான சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.யை 12 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யில் இருந்து திரும்ப பெறும் தொகையை வணிகர்களுக்கு அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் வங்கி கணக்கில் நேரடியாக சென்றடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

ஆர்.கே.வி.ரோடு மற்றும் மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், மார்க்கெட் பகுதியில் உள்ள காலி இடத்தை கட்டண முறையில் வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது.

ஈரோட்டில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை வர உள்ளதால் கடைவீதிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது. ஈரோடு கடைவீதிகளில் இரவுநேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மணிக்கூண்டு பகுதியை சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் பொது கழிப்பறை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்