அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களில் ரூ.10 கோடியில் தூண்டில் வளைவு - மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் ரூ.10 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Update: 2019-08-30 21:45 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி மீனவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், துணை கலெக்டர் (பயிற்சி) பிர்தவுஸ் பாத்திமா, மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமெக் ஜெயக்குமார், உதவி இயக்குனர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது நடந்த விவாத விவரம் வருமாறு:-

குறும்பனை பெர்லின்:- மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரியவகை மணல் ஆலை விதிமுறைகளை மீறி தினமும் லட்சக்கணக்கான டன் கடல் மணலை அள்ளுவதே கடல் அரிப்பு ஏற்பட முக்கிய காரணம். மேலும் கழிவு மணலை எடுத்த இடத்தில் கொட்டுவது கிடையாது. அந்த மணலை அங்கேயே மலைபோல் குவித்து வைக்கின்றனர் அல்லது வெளியாட்களுக்கு விற்பனை செய்கின்றனர். எனவே இந்த மணல் ஆலை நிறுவனம் கடற்கரைகளில் இருந்து மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும். நிர்வாக வசதிக்காகவும், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தாமதமின்றி நேரடியாக மக்களுக்கு சென்று சேரவும், அதிகாரங்களை பரவலாக்கவும் குமரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடலோர மற்றும் கரையோர பகுதிகளை ஒன்றாக இணைத்து புதிதாக ஒரு கடலோர மாவட்டம் உருவாக்கி மக்களின் துயர் துடைக்க வேண்டும். மீன்வளத்துறை இலவச வீடு திட்டத்துக்கு ஒதுக்கும் தொகையை இரட்டிப்பாக வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 70 ஆக உயர்த்த வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணம், மீன்பிடி குறைந்தகால நிவாரணம், சேமிப்பு நிவாரணம் போன்ற திட்டங்களில் மீனவர்கள் பயன்பெற 3 முறையும் தனித்தனியாக ஆன்லைன் பதிவு செய்யும் முறையை மாற்றி ஒரே முறையில் ஆன்லைன் பதிவை முடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மீன்வள வங்கி அமைக்க வேண்டும். கடலோர கிராமங்களில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலெக்சாண்டர்:- அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதி கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க முட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் அலைதடுப்புச்சுவரை கிழக்கு பகுதியில் ஒரு கி.மீ. தூரம் வரை நீட்டிக்க வேண்டும். ரூ.10 கோடி திட்டத்தில் தூண்டில் வளைவு அமைக்கும்போது அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களைத்தவிர பிற கிராமங்கள் பாதிப்படையும். எனவே இதற்கு ஒரே தீர்வு முட்டம் துறைமுக அலைதடுப்புச்சுவர் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.

ஜோஸ்:- மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரம் பெறுவதற்காக இ-சேவை மையங்களுக்கு மக்களை அலைய விடுகின்றனர். இது மீனவர்களை இழிவுபடுத்தும் செயலாக உள்ளது.

இதேபோல் வெளிப்பொருத்தும் எந்திரம் கொண்ட வள்ளங்களுக்கு பழைய முறையில் மானிய விலையில் மண்எண்ணெய் வழங்க வேண்டும்.

2011-ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த மீனவர் நலவாரியம் 8 ஆண்டுகள் செயல்படாமல் இருக்கிறது. அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும் போது கூறியதாவது:-

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை நிறுவனம் மணல் எடுப்பதை தடை செய்ய கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது. அப்படி செய்யவும் முடியாது. விதிமுறைகளை மீறி மணல் எடுத்தால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்கள் அலைகளினால் பாதிக்காமல் இருக்க ரூ.10 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நபார்டு வங்கியில் இருந்து நிதி அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். மேலும் மீனவர்களின் கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் விமல்ராஜ், பில்பின், மைக்கேல், ஜேசு அடிமை, ஜெயசுந்தரம், பங்குத்தந்தை பெபியான்ஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்