உளுந்தூர்பேட்டை பகுதியில், ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த 2 பேர் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-30 23:00 GMT
விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலு என்கிற பொட்டுவேலு (வயது 50). இவரும் இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (46), மகன் கணேசன் (27), உறவினர் பிரபாகரன் (50) ஆகிய 4 பேரும் கடந்த 2017-ம் ஆண்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளனர். 13 மாத முதிர்வுத்தொகை முடிந்த பிறகும் பணம் கட்டியவர்களுக்கு அவர்கள் 4 பேரும் ஏலச்சீட்டு பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை வற்புறுத்தி கேட்டும் பணத்தை கொடுக்காமல் அவர்கள் 4 பேரும் ஏமாற்றி வந்தனர். இதனிடையே கடந்த 3.9.2018 முதல் 4 பேரும் திடீரென தலைமறைவாகி விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர். இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் வேலு உள்பட 4 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் நேவிஸ்அந்தோணிரோஸி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 பேரும் சேர்ந்து 45-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வேலுவின் மனைவி கிருஷ்ணவேணி நேற்று முன்தினம் வந்தார். இதையறிந்ததும் சீட்டுப்பணம் கட்டி ஏமாற்றப்பட்ட மக்கள், அந்த வங்கிக்கு விரைந்து சென்று கிருஷ்ணவேணியை மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள், கிருஷ்ணவேணியை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணவேணியையும், அவர் கொடுத்த தகவலின்பேரில் பிரபாகரனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் வேலு, அவரது மகன் கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்