திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: பயணியை சரமாரியாக தாக்கிய டிரைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணியை சரமாரியாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து தேனி வழியாக குமுளிக்கு செல்லும் அரசு பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பஸ்சில் ஏறி, பின்புற இருக்கையில் அமர்ந்த பயணி ஒருவருக்கும், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஒரு டிரைவர், அந்த பயணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
பதிலுக்கு பயணியும் டிரைவரை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் அந்த பயணியை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த வடக்கு போலீசார் தாக்குதலுக்கு உள்ளான பயணி, அவரை தாக்கிய டிரைவர்கள், கண்டக்டர்கள் என 5 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பயணி தேனியை சேர்ந்த விஜய் (வயது 35) என்பதும், அரசு பஸ் டிரைவர் அவருடைய கன்னத்தில் அறைந்ததால் தான் அவர் திருப்பி தாக்கினார் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் பயணியை சரமாரியாக அடித்து உதைத்ததாக அரசு பஸ் டிரைவர் தினகரன், கண்டக்டர் அலெக்ஸ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல், பஸ் தற்போது புறப்படாது என்று அரசு பஸ் கண்டக்டர் கூறியும் பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தகராறு செய்தார் என்று விஜய் மீது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் விஜய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.