கோவை மாங்கரை வனப்பகுதியில், காட்டு யானை பரிதாப சாவு
கோவை மாங்கரை வனப்பகுதியில் காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
துடியலூர்,
கோவை வனக்கோட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை, கோவை உள்பட 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான கோவையை அடுத்த ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் வறட்சி நிலவும் காலங்களில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் மனித- வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனைக்கட்டி அருகே நேற்று முன்தினம் உடல் நலம் சரியில்லாமல் ஒரு பெண் யானை இறந்தது.
இந்தநிலையில் நேற்று காலை மாங்கரை அருகே ஒரு குட்டி உள்பட 4 யானைகளுடன் ஒரு பெண் யானை வந்தது. இதில் பெண் யானை திடீரென்று மயங்கி தரையில் விழுந்தது. இதனால் அதனுடன் வந்த குட்டி யானை உள்ளிட்ட யானைகள் பயங்கரமாக பிளிறியபடி அங்கேயே சுற்றி சுற்றி வந்தன. இதை அறிந்த ஆதிவாசி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மற்ற யானைகளை அங்கிருந்து விரட்டினர். இதையடுத்து கால்நடை டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் விரைந்து வந்து யானையின் உடல்நலனை பரிசோதனை செய்தனர். இதில் அந்த யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே அதற்கு குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6 மணியளவில் அந்த யானை பரிதாபமாக இறந்தது. அந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். இதையடுத்து அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் யானை இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.கோவை துடியலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் இறந்து வருவது வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.