வெம்பக்கோட்டை அணை வறண்டது, சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வெம்பக்கோட்டை அணை வறண்டதால் சிவகாசி நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
தாயில்பட்டி,
சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை தலையணையில் வைப்பாறு தன் பயணத்தை தொடங்கி திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம் வரை 150 கிலோமீட்டர் பயணித்து வேம்பார் சிப்பிகுளம் அருகே கடலில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
சிவகாசிக்கு குடிநீர்ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த வைப்பாற்றின் குறுக்கே ரூ.5 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த அணை நீரை பயன்படுத்தி சராசரியாக 6,275 டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. 1,361 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணையின் உயரம் 24 அடியாகும். பாசனத்திற்கு தண்ணீர் திறக்க 2 மதகுகளும் உபரி நீரை வெளியேற்ற 5 மதகுகளும் உள்ளன.
அணையில் இருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வலதுபுற பிரதான கால்வாய், இடதுபுற பிரதான கால்வாய் உள்ளன.
வலது கால்வாய் மூலம் பனையடி, பந்துவார்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கோட்டயம், பச்சேரி, ஓ.மேட்டுப்பட்டி, ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளும், இடது கால்வாய் மூலம் வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், சல்வார்பட்டி, சங்கரநத்தம், படந்தால் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளும் பலனடைந்து வருகின்றனர். மேலும் அணையிலிருந்து நென்மேனி, வல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விடப்படும்.
இது தவிர சிவகாசி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை மட்டுமே உள்ளது. தினமும் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக அணையின் உட்புறத்தில் சுமார் 10 அடி ஆழத்தில் உறை கிணறுகள் உள்ளன.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அதிக மழை கொட்டியதால் இந்த அணை அடுத்தடுத்து 3 முறை நிரம்பி வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கன்குடி அணையை சென்றடைந்தது. அதற்கு பிறகு அணை நிறையாவிட்டாலும் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது.
ஆனால் தற்போது தொடர்ந்து மழை இல்லாததால் அணை முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. சிவகாசிக்கு தண்ணீர் கொண்டு செல்வதிலும் பிரச்சினை உருவாகி இருக்கிறது. அணையில் ஒரு அடி தண்ணீர் இருக்கும் சமயத்தில் உறைகிணறு முழுமையாக தூர்வாரப்படும். மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு குறைந்த அளவு தண்ணீர் சிவகாசி நகராட்சி பகுதிக்கு செல்லும். ஆனால் தற்போது அத்தகைய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்காததால் சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உறைகிணறுகளை உடனடியாக தூர்வாரிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அணையில் வண்டல் மண் அதிகமாக படிந்துள்ளதால் தூர்வாரிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கேரள பம்பை ஆற்றை வைப்பாறுடன் இணைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக அனைவராலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் நீரை திருப்பினால் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மக்கள் பயனடைவார்கள். மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.