முழு கொள்ளளவை எட்டியது கிருஷ்ணராஜ சாகர் அணையில் எடியூரப்பா சமர்ப்பண பூஜை ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக பேச்சு

முழு கொள்ளளவை எட்டியுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று சமர்ப்பண பூஜை செய்தார்.

Update: 2019-08-29 23:30 GMT
மைசூரு,

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை. இந்த அணை காவிரியின் குறுக்கே அமைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்யத்தொடங்கியது. அதாவது ஜூலை மாத இறுதியில்தான் மழை பெய்யத்தொடங்கியது. அதையடுத்து சுமார் 15 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. மேலும் கடந்த 12-ந் தேதி கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் அமைந்திருக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை பீச்சனஹள்ளி கிராமத்திற்கு உட்பட்ட கபினி அணையும் தனது முழுகொள்ளளவை எட்டியது. இவ்விரு அணைகளில் இருந்துதான் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள கே.ஆர்.எஸ். அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா 29-ந் தேதி(அதாவது நேற்று) சிறப்பு பூஜை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கே.ஆர்.எஸ். அணையில் முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜை செய்வதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அவர் நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் மைசூரு சாமுண்டி மலைக்கு சென்றார்.

அங்கு அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கார் மூலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்று சமர்ப்பண பூஜை செய்தார். அதாவது நவதானியங்கள், பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை அணையில் நிரம்பி உள்ள நீரில் போட்டு எடியூரப்பா சமர்ப்பணம் செய்து வழிபட்டார். பின்னர் அவர் அணையின் நடுவே அமைந்திருக்கும் காவிரித்தாய் சிலைக்கும் சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் அணையின் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்துள்ளது. இருப்பினும் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு தமிழகத்திற்கு, கர்நாடகம் சார்பில் வழங்கப்பட வேண்டிய தண்ணீரையும் திறந்து விட்டுள்ளோம். இதனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருக்காது. கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 49.50 டி.எம்.சி. தண்ணீர் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி நீர்) உள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து அணைகள் நிரம்ப வேண்டும்.

விவசாயிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பிரச்சினை தீர வேண்டும். இதற்காக நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளையும் சேர்த்து மொத்தம் 114 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அதனால் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப உத்தரவிட்டுள்ளேன். அடுத்த மாதம் தசரா விழா தொடங்குகிறது.

தசரா விழாவை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வருவார்கள். அவர்களை கவரும் வகையில் பிருந்தாவன் பூங்காவில் வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்க தயாராக இருக்கிறேன்.

கே.ஆர்.எஸ். அணை அருகே கண்ணம்பாடி கிராமத்தில் வசித்து வரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரையில் நில உரிமைப் பட்டாக்கள் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கு விரைவில் நில உரிமைப் பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இன்னும் 20 நாட்களில் சர்க்கரை ஆலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதன்மூலம் சர்க்கரை ஆலைகளை மூடும் நிலை ஏற்படாது. அதன்மூலம் கரும்பு விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள்.

மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளின் நிலை என்ன?, அவற்றை ஏன் மூடினார்கள்? என்பதையும் கண்டறிந்து அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நிதியை வழங்க தயாராக இருக்கிறேன். மேலும் இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறேன். விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்யவும் சர்க்கரை ஆலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

கர்நாடகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் நிதி கேட்டுள்ளேன். மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் மீண்டும் வந்து ஆய்வு செய்வார்கள். அடுத்த மாதம்(செப்டம்பர்) பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்துக்கு வருவார். அப்போது அவரிடம் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி அதிக நிதி கேட்பேன். இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

விழாவில் மந்திரி ஆர்.அசோக், சுமலதா எம்.பி., முன்னாள் மந்திரிகளும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களுமான சி.எஸ்.புட்டராஜு, டி.சி.தம்மண்ணா, மற்றும் ஸ்ரீகண்டேகவுடா எம்.எல்.சி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்