திருப்பூர் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க பரிந்துரைக்கப்படும்: சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தகவல்
திருப்பூர் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பூர்,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2018-20-ம் ஆண்டுக்கான பொது நிறுவனங்களின் குழுவினர் செம்மலை எம்.எல்.ஏ. (மேட்டூர் தொகுதி) தலைமையில் நேற்று திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), ஈஸ்வரன் (பவானிசாகர்), கோவி.செழியன் (திருவிடைமருதூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் இருந்தனர்.
இந்த ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்கும் பணி நடக்கிறது. அந்த பணிகளை குழுவினர் பார்வையிட்டனர். மேலும் சி.டி.சி. ஸ்கேன் அமைக்க உள்ள இடத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவ அதிகாரிகளுடன் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர். திருப்பூர் தெற்கு குணசேகரன் எம்.எல்.ஏ. திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று குழுவிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர் குழுவின் தலைவர் செம்மலை எம்.எல்.ஏ.கூறும்போது, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளது. மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அதிகப்படியானவர்கள் வந்து பயன்பெற்று செல்கிறார்கள். இந்த மருத்துவமனையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றும்போது மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி கிடைக்க வாய்ப்பாக அமையும்.
எனவே திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்லூரி அமைக்க அரசுக்கு குழு பரிந்துரைக்கும். அதுபோல் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் அலுவலகம் காங்கேயத்தில் உள்ளது. அங்கு ரூ.4 கோடி மதிப்பிலான மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சியில் கூடுதல் பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி மற்றும் கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக சந்திராபுரத்தில் 10 லட்சம் லிட்டர் மற்றும் 7½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை தொட்டிகள் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. அந்த பணிகளை குழுவினர் ஆய்வு செய்து, மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 68 சாயப்பட்டறை நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளனர். நாளொன்றுக்கு 55 லட்சம் லிட்டர் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதில் 52 லட்சம் லிட்டர் நீர் திரும்ப பெறப்படு கிறது. 1½ லட்சம் லிட்டர் நீர் உப்பு கரைசலாக மாற்றப்படுகிறது. இவை இரண்டையும் மீண்டும் சாயப்பட்டறைகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.
திருப்பூரில் மொத்தம் 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் 367 சாயப்பட்டறை நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுதவிர 112 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு மூலமாக நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் நீர் மிச்சப்படுத்தப்படுகிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு குறித்து குழு தலைவர் செம்மலை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தோம். சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் தொழிலும் வளர வேண்டும். அதேநேரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நிலம், நீர், காற்று மாசு ஏற்படாதவாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சுத்திகரிப்பு செய்து செயல்படுத்த வேண்டும் என்று இங்குள்ள தொழில்துறையினரிடம் அறிவுறுத்தியுள்ளோம். தொழிலும் வளர்ச்சி, மாசு கட்டுப்பாடு இந்த இரண்டையும் சரிசமமாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தொழில் நகரில் தொழில் நசிவு ஏற்படாமல் இருப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்து திருப்பூர் மாசுபட்ட நகராக உள்ளது என்று தெரிவித்துள்ளது. தொழில் பாதிக்காத வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாசில்லாத நகராக திருப்பூரை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். தொழில்துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய 2 தரப்பு கோரிக்கைகளையும் கேட்டுள்ளோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் தலைமை செயலக செயலாளர் சீனிவாசன், துணைச்செயலாளர் கருணாகரன், குழு அதிகாரி ரவிச்சந்திரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.