சோலார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குடிமங்கலம் அருகே சோலார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமங்கலம்,
குடிமங்கலத்தையடுத்த ஆமந்தகடவு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் பெரிய அளவில் காற்றாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நீர்வழித்தடங்கள் பாதிக்கப்படுவதாகவும், பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதே பகுதியில் சோலார் மின் நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் அதனை தடுத்து நிறுத்தக்கோரி ஆமந்தகடவு பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
ஆமந்தகடவு பகுதியில் காற்றாலை அமைப்பதாகக் கூறி சுமார் 310 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் அந்த இடத்தில் சோலார் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஓடைகளில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பி.ஏ.பி. பாசனத்திட்ட குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படவுள்ளதால் இந்த பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வீடுகளில் கருப்புகொடி கட்டியும், கருப்புகொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.