பொள்ளாச்சி அருகே கொப்பரை தேங்காய் வாங்கி ரூ.1.40 கோடி மோசடி; 5 இடைத்தரகர்கள் கைது

பொள்ளாச்சி அருகே கொப்பரை தேங்காய் வாங்கி ரூ.1 கோடியே 40 லட்சம் மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-29 22:45 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை, கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் தேங்காயை உலர் களத்தில் போட்டு கொப்பரை தயாரிக்கிறார்கள். இந்த கொப்பரைகள், தேங்காய் எண்ணை தயாரிப்பதற்கும், வட இந்தியாவில் உணவுக்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தென்இந்தியாவில் கோவில்களில் தேங்காய் உடைப்பது போல வடஇந்தியாவில் கொப்பரை தேங்காய்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

எனவே விவசாயிகள் தேங்காய்களை கொப்பரை தேங்காய் தயாரிப்பவர்களிடம் கொடுத்து எப்போது விலை உயருகிறதோ அப்போது அதை விற்க சொல்வார்கள். பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொப்பரை தேங்காய் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர்.

அவர்களிடம் கொப்பரை தேங்காய்களை இடைத்தரகர்கள் வாங்கி விற்பனை செய்கிறார்கள். பின்னர் அதற்குரிய பணத்தை கொப்பரை தேங்காய் தயாரிப்பவர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு தேங்காய் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய பணத்தை பட்டுவாடா செய்வார்கள்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தை சேர்ந்த உலர்கள உரிமையாளர் பிரேம் ஆனந்த் (வயது 51) என்பவரிடம் இருந்து ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 192 டன் கொப்பரை தேங்காயை கிணத்துக்கடவை சேர்ந்த 6 இடைத்தரகர்கள் வாங்கினார்கள்.

கொப்பரை தேங்காயை விற்ற பிறகும் அதற்குரிய பணத்தை பிரேம் ஆனந்திற்கு இடைத்தரகர்கள் தரவில்லை. இது குறித்து கேட்டதற்கு கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி ஒரு பகுதி தொகையை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதி ரூ.1 கோடியே 40 லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லை. அந்த பணத்தை பிரேம் ஆனந்த் பல முறை கேட்டு பார்த்தார். ஆனால் இடைத்தரகர்கள் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இடைத் தரகர்கள் 6 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420(மோசடி) உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நெகமத்தை சேர்ந்த நாராயண சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இந்த மோசடி தொடர்பாக கோவையை அடுத்த கிணத்துக்கடவு கோப்பனூர்புதூர் கப்பளாங்கரையை சேர்ந்த வி.சிவகுமார் (41), ராதாகிருஷ்ணன் (61), ஆர்.மனோஜ்குமார் என்ற மனோஜ்(25), ஏ.சக்திவடிவேல்(52) மற்றும் பொள்ளாச்சி புளியம்பட்டி கலைஞர் நகரை சேர்ந்த கே.வேணுகோபால்(50) ஆகிய 5 இடைத்தரகர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

விவசாயிகளிடம் இருந்து தேங்காயை உலர்கள உரிமையாளர்கள் வாங்குகிறார்கள். அதை அவர்கள் கொப்பரையாக தயாரிக்கிறார்கள். அவற்றை உலர்கள உரிமையாளர்களிடம் இருந்து இடைத்தரகர்கள் வாங்கி விற்று கொடுப்பது வழக்கம். ஆனால் சில இடைத்தரகர்கள் கொப்பரை தேங்காய்களை விற்ற பிறகும் உலர்கள உரிமையாளர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி மோசடி செய்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு உலர்கள உரிமையாளர்களால் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆனாலும் தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரையை விற்று கொடுக்கும் இடைத்தரகர்கள் மீது புகார் கொடுத்தால், விவசாயிகள் தேங்காய் கொடுக்க தயங்குவார்கள். அதோடு தாங்கள் தயாரிக்கும் கொப்பரையை விற்பதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் யாரும் புகார் கொடுப்பது இல்லை. இதனால் மோசடி தொடர்கிறது. போலீசில் புகார் கொடுத்தால் தான் குற்றச் செயல்களை சட்டரீதியாக தடுக்க முடியும். மேலும் கொப்பரை தேங்காய் மோசடி பணத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்ற தகவல் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்