நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

சாதி சான்றிதழ் வழங்க கோரி நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

Update: 2019-08-29 22:00 GMT
நெல்லை, 

தமிழ்நாடு பழங்குடியின நாடோடி கூட்டமைப்பு செயலாளர் மகேசுவரி தலைமையில் தருவை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு சாதி சான்று வழங்கப்படவில்லை. பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இதனால் எங்கள் குழந்தைகள் உயர்கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பிலும் எங்கள் சமுதாயத்துக்கு முன்னுரிமை கிடைப்பது இல்லை. தற்போது தருவையில் இருந்து வந்து இருக்கிறோம்.

எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் பலமுறை முறையிட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லை. எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க நெல்லை மாவட்ட நிர்வாகமும், நெல்லை உதவி கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்