உணர்வுபூர்வமான விஷயங்களில் அரசியல் செய்தால், வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண்பது யார்?

உணர்வுபூர்வமான விஷயங்களில் அரசியல் செய்தால் வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண்பது யார்? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி கேட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-08-28 22:30 GMT
பெங்களூரு,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த சட்ட பிரிவை நீக்குவதற்கு முன்பு அந்த மாநில மக்களின் கருத்தையும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் இதை மத்திய அரசு செய்யவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய பா.ஜனதா அரசு அரசியல் ஆதாயத்தை பெற கருதி இருக்கக்கூடாது. உணர்வுபூர்வமான விஷயங்களில் அரசியல் செய்தால், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, படிப்பறிவின்மை மற்றும் பசி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது யார்?.

உணர்வுபூர்வமான பிரச்சினையில் ஆதாய அனுதாபம், பிரசாரம் தேடுவது, மக்களை தவறாக வழிநடத்துவது அரசின் வேலை அல்ல. இதை தவிர மத்திய அரசு வேறு எதையும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய சோகம். கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் மோடிக்கு, உள்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட நேரம் இல்லை. வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க முடியாது. ஆனால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாதா?.

அதிகளவில் பிரசாரம் எந்த விஷயங்களில் கிடைக்கிறதோ அதற்கு தான் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தால் அதிக பிரசாரம் கிடைக்காது என்பதால், அவர் இங்கு வரவில்லை.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்