சூளகிரி அருகே, 3½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சூளகிரி அருகே 3½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெற்றோர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தனர். இதையொட்டி அவர்கள் தங்கள் 3½ வயது பெண் குழந்தையை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றனர்.
இந்தநிலையில் அந்த பெண் குழந்தை அந்த வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த திம்மராஜ் (வயது 20) என்பவர் அங்கு வந்தார்.
பின்னர் அவர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர் இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திம்மராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.