மாவட்டம் பிரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்: பதிவு செய்து டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே பேச அனுமதி
வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பாக நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்க பதிவு செய்து டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேலூர்,
வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வேலூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடக்கிறது.
திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வாணியம்பாடி சின்னக்கல்லுப்பள்ளியில் உள்ள மருதகேசரி ஜெயின் பெண்கள் கல்லூரியில் இன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை நடக்கிறது.
ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அப்துல்ஹக்கீம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது.
புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக அமைப்புகள் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆஜராகி தங்கள் கருத்துகளை கூடுதல் ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரிடம் தெரிவிக்கலாம். கருத்து தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், வணிக அமைப்புகள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மனு அளித்திடும் நபர், வேலூர் மாவட்டத்தின் எந்தப்பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் மேற்குறிப்பிட்ட எந்த ஒரு இடத்திலும் ஆஜராகி மனு அளிக்கலாம். மேற்படி இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மனுக்கள் மட்டுமே பெறப்படும்.
தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச விரும்பும் நபர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியை கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வெளியே முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிரத்யேக டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்ற நபர்கள் மட்டுமே கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படுவார்கள். வாய்மொழியாக அளிக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது. எழுத்து மூலமாக அளிக்கப்படும் கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.