அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் - மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேச்சு
அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் கே.பிரதாப் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட பொதுதகவல் அலுவலர்கள் தங்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர். கூட்டத்தில் தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேசியதாவது:-
அரசு நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தகவல் தேவைப்படுபவர்கள் ரூ.10 முத்திரை ஒட்டி தேவையான தகவல்களை பெற விண்ணப்பிக்கலாம். பொது தகவல் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்துக்கு வரும் மனுதாரர்களின் கோரிக்கைகளை கனிவுடன் விசாரித்து மனுதாரர்களை நல்ல மரியாதையுடன் நடத்தினாலே தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள் குறையும். அலுவலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவர்கள் என்பதை கட்டாயம் உணர்ந்து செயல்பட வேண்டும். மனுதாரர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை 30 நாட்களுக்குள் வழங்கவில்லை என்றால், மனுதாரர் மேல்முறையீடு செய்யவதற்கு இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
தகவல் வழங்காத அலுவலருக்கு அபராதம் விதிக்கவும், உயர் அலுவலர்கள் மூலம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை முறையாக வழங்காமல் அலுவலர்கள் தவறு செய்தால், உயர் பதவிக்கு சென்றாலும் மேல்முறையீட்டின் போது பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மேல்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பு வழங்கிய 2 நாட்களில் தகவல் உரிமை சட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த தீர்ப்புகளை அரசு அலுவலர்கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மனிதனுக்கு தகவல் பெற அதிக அதிகாரம் உள்ள இந்த சட்டம் வரும் காலங்களில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 15 மேல்முறையீட்டு மனுக்கள் மீது தகவல் ஆணையர் விசாரணை நடத்தினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் மற்றும் அனைத்து துறை பொது தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.