போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

கிண்டியில், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-28 21:45 GMT
ஆலந்தூர்,

சென்னை கிண்டி, வேளச்சேரி மெயின் ரோட்டில் பொழுதுபோக்கு வளாகம் அருகே கிண்டி போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40) என்பவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மயிலாப்பூரை சேர்ந்த பரத் (23) என்பவர் தனியார் உணவு வினியோகம் செய்வதற்காக போக்குவரத்து விதியை மீறி எதிர்திசையில் வந்தார். இதை பார்த்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் எதிர் திசையில் வரக்கூடாது. திரும்பி செல்லுமாறு பரத்திடம் கூறினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரத், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மூக்கில் கையால் ஓங்கி குத்தி, காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கிண்டி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவரை தாக்கியதாக பரத்தை கைது செய்தனர். மேலும் இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* புழல் அருகே சாலையை கடந்து செல்ல முயன்ற புழல் காவாங்கரையை சேர்ந்த கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம் (58) கார் மோதி பலியானார்.

* தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரை வழிமறித்த 6 பேர், கத்தியை காட்டி மிரட்டி 2½ பவுன் தங்க சங்கிலி மற்றும் மோதிரத்தை பறித்து சென்றனர்.

* நீலாங்கரை அனுமான் காலனியை சேர்ந்த பெயிண்டர் ரவிக்குமார் (40), அதே பகுதியில் உள்ள நீர்த்தேக்க குட்டையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

* கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர் ராஜகோபாலன் என்பவருடைய மனைவி கல்யாணி (68) வீட்டின் படுக்கையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

* திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் கஞ்சாவுடன் நின்ற ஆனந்த் (24), வசந்தகுமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* தேனாம்பேட்டையில் மாவா விற்ற கங்காதரன் (32), பிரபு (25), குழந்தைவேலு (59) ஆகியோர் கைதானார்கள்.

*நங்கநல்லூரை சேர்ந்த குமரேசபாண்டியன்(35) பொழிச்சலூரில் நண்பர்களுடன் மது அருந்தியபோது, காதல் தோல்வியால் எனக்கு வாழப்பிடிக்கவில்லை என்று கூறி திடீரென மதுபாட்டிலால் தனது கையை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

* அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களிலும் பி.சி. மற்றும் டி நிலையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரம் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆவடியை அடுத்த அண்ணனூர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த நாகராணி (50) எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

*திருமணம் செய்ய மறுத்த பெண் மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்த தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார்(36) என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்