தேனாம்பேட்டையில் 7-வது மாடியில் இருந்து விழுந்த கட்டிடத்தொழிலாளி சாவு

தேனாம்பேட்டையில், 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிடத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-28 22:00 GMT
சென்னை,

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கபிராஜ் தாஸ்(வயது 39). கட்டிடத்தொழிலாளியான இவர், சென்னையில் தங்கியிருந்து தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் தெருவில் பொதுப்பணித்துறை குடிசை மாற்றுவாரியத்தில் கட்டிட வேலை செய்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி 7-வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் கபிராஜ் தாசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

சக தொழிலாளிகள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கபிராஜ் தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹவீர்(25). இவர் சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகரில் தங்கியிருந்து, டி.டி.கே சாலையில் ஒரு தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து, ரத்னா நகரில் உள்ள அவரது அறைக்கு நேற்று சென்றார். அப்போது ஜஹவீர் மாடிப்படியில் ஏறும் போது, கால் தவறி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜஹவீரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜஹவீர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்