தண்ணீர் பற்றாக்குறையால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பாதிப்பு

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-08-28 22:45 GMT
சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் அதிபர் ஒருவரின் உதவியால் அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 150 படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் தீக்காய சிகிச்சை பிரிவும், பிரசவ பிரிவும் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் 175-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், டாக்டர்களும், நர்சுகளும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் டாக்டர்களும், நோயாளிகளும், நோயாளிகளுடன் வரும் உறவினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான தண்ணீரை தற்போது நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து பெற்று வருவதாக கூறப்படுகிறது. 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டும் கிடைப்பதால் இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைசரி செய்ய மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் உரிய பலன் கிடைக்க வில்லை என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மருத்துவமனை பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து அரசு ஆஸ்பத்திரியின் தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகள் பாதித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க வசதியாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்