விருதுநகரில் 6 மாதத்திற்குள் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிந்து விடும் - நகராட்சி கமிஷனர் தகவல்

விருதுநகர் பாதாள சாக்கடை திட்டப் பணியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளதால், 6 மாதங்களுக்குள் பணிகள் முழுமையாக முடிய வாய்ப்பு உள்ளது என நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

Update: 2019-08-28 22:15 GMT
விருதுநகர்,

தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்ற அரசு முடிவு எடுத்த நிலையில் விருதுநகர் நகராட்சியிலும் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்ற அரசு உத்தரவிட்டது. பொதுமக்களின் பங்களிப்புடனான இத்திட்டம் 2 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளிக்கப்பட்டது.

திட்டப்பணிகளை குடிநீர் வடிகால் வாரியத்தினரும், நிதி மேலாண்மையை நகராட்சி நிர்வாகமும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. விருதுநகர் பகுதியை 2 ஆக பிரித்து 2 ஒப்பந்தகாரர்களிடம் திட்டப்பணி ஒப்படைக்கப்பட்டது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாததால் திட்டப்பணி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை.

இதைதொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இத்திட்டப்பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அதன்பேரில் தற்போதைய நிலையில் திட்டப்பணியில் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இந்த திட்டம் முழுமையாக எப்போது பயன்பாட்டுக்கு வரும் என விருதுநகர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் 95 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் வீட்டு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 ஆயிரம் வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை 1800 வீடு இணைப்புகளே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரத்து 200 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும். இதற்கான ஒப்பந்தக்காரர் பணிகளை மேற்கொள்ளுவதில் போதிய வேகம் காட்டாத நிலை நீடிப்பதால் இணைப்புகள் கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எது எப்படியாயினும் இன்னும் 6 மாத காலத்திற்குள் இத்திட்டம் தொடர்பான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும். மேலும் இந்த திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு அவ்வப்போது கழிவுநீர் வெளியேறும் நிலையை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 35 சதவீதம் கழிவுநீர் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விடப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட நீரை நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில் ஏரி போன்று நீரை தேக்கிவைத்து அந்த பகுதியை பசுமையாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக அதற்காக ரூ.93 லட்சத்தில் வாங்கப்பட்ட எந்திரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்ததால் அந்த எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் ஏற்பட்டது.

தற்போது எந்திரத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த எந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த சில மாதங்களில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்