டாஸ்மாக் ஊழியர் கொலையில், சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு; போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்

டாஸ்மாக் ஊழியர் கொலையில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு பரிசு வழங்கினார்.

Update: 2019-08-27 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பேட்டப்பனூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்த திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காவேரி நகரைச் சேர்ந்த ராஜா (வயது 45) என்பவர் கடந்த 14-ந் தேதி இரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். மேலும் கடையில் வசூல் ஆகி இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையிலான தனிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார் (மகராஜகடை), சுரேஷ்குமார் (தாலுகா), சப்-இன்ஸ்பெக்டர் கோபால்சாமி, வேல்முருகன் மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை கொண்டும், அங்கு சிதறி கிடந்த ரத்த துளிகளை வைத்தும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் கொலையுண்ட ராஜா அல்லாமல் வேறு ஒருவரின் ரத்தமும் அங்கு சிதறி கிடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நல்லூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அரவிந்தன் (22) இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 14-ந் தேதி இரவு கொலை நடந்த நிலையில் 10 நாளில் குற்றவாளி பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 83 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டிப்ளமோ படித்துள்ள அரவிந்தன், இந்த கடைக்கு சென்று அடிக்கடி மதுபாட்டில்களை வாங்கி வந்துள்ளார். 15-ந் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் இருக்காது. எனவே அதற்கு முதல் நாள் 14-ந் தேதி அதிக அளவில் தொகை வசூல் ஆகி இருக்கும் என்ற எண்ணத்தில் அதை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைக்கு சென்றுள்ளான்.

சம்பவத்தன்று இரவு கடையை பூட்டக்கூடிய நேரத்தில் உள்ளே புகுந்து டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்து வசூல் ஆகி இருந்த ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளான். அந்த நேரம் கொலையாளி அரவிந்தனின் கையில் ரத்த காயம் ஏற்பட்டதால், அதற்கு சிகிச்சை பெற முடிவு செய்தான். தன் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர் கொலையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் பாராட்டி பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்