கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட டிராவல்ஸ் அதிபரை கடத்தி கொலைசெய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

காட்பாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட டிராவல்ஸ் அதிபரை கடத்தி கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் 4 பேருக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-08-27 22:30 GMT
வேலூர்,

காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 46). காட்பாடியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் துரைமூலை கிராமத்தை சேர்ந்த சாரதி என்பவரை அணுகி கடனாக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆந்திராவில் கிரானைட் தொழில் மிகவும் லாபகரமாக நடக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து கிரானைட் தொழில் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

இதற்காக மனோகரனிடம் இருந்து சித்தூர் பகுதியில் வைத்து சாரதி கடந்த 2003-ம் ஆண்டு ரூ.9 லட்சத்தை பங்குத்தொகையாக பெற்றுள்ளார். ஆனால் பல வருடங்களாகியும் கிரானைட் தொழிலை தொடங்கவில்லை. இதனால் மனோகரன் தான்கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். சாரதி பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை.

இதனால் சாரதி மீது சித்தூர் போலீசில் மனோகரன் புகார் செய்தார். அதன்பேரில் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் சாரதி பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை கேட்டதற்கு அவரை சாரதி தாக்கி உள்ளார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் மனோகரன் புகார் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாரதி, மனோகரனை கொலைசெய்ய திட்டமிட்டார். இதற்காக சேண்பாக்கத்தை சேர்ந்த தனது சித்தி மகன் சீனிவாசன் (25) என்பவரை அணுகினார். அதற்கு சம்மதித்த சீனிவாசன், சாரதியை கொலைசெய்ய அதேப்பகுதியை சேர்ந்த முனியாண்டி (35), வெள்ளை என்கிற ஜெயராஜன் (23), செந்தூர்நாதன் (28), அசோக் (22), ராஜேஷ் (20), குமார் என்கிற ஜெயக்குமார் (34) ஆகியோரை ஏற்பாடு செய்தார்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து 28.3.2008 அன்று மனோகரனை கடத்திச்சென்று கொலை செய்தனர். பின்னர் அவருடைய உடலை கவசம்பட்டு பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு இடத்தில் புதைத்து விட்டு சென்று விட்டனர். அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால் அதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் பிரபாகரன் கே.வி.குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சென்று அந்த இடத்தை தோண்டிபார்த்தபோது டிராவல்ஸ் அதிபர் மனோகரன் கொலை செய்யப்பட்டு, உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதி உள்பட 8 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே சாரதி, சீனிவாசன், வெள்ளை என்கிற ஜெயராஜன் ஆகிய 3 பேர் இறந்து விட்டனர். மற்ற 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி தீர்ப்பு கூறினார். அதில் முனியாண்டி, செந்தூர்நாதன், அசோக், ராஜேஷ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை ஆஜரானார்.

மேலும் செய்திகள்