பாரதியார் பல்கலைக்கூடத்தில் தேவாரப்பாடல்கள் குறித்த பயிற்சி பட்டறை

அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் தேவாரப்பாடல்கள் தொடர்பாக 3 நாட்கள் பயிற்சி பட்டறை நடக்கிறது. இந்த பட்டறையை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-27 22:00 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் பாரதியார் பல்கலைக்கூடம் அரியாங்குப்பத்தில் இயங்கி வருகிறது. இங்கு இசை, நடனம், நுண்கலை என 3 துறைகளில் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்திராகாந்தி தேசிய கலை மண்டல மையமும், புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடமும் இணைந்து “தேவாரப் பாடல்களில் பழந்தமிழ் இன்னிசைப்பண்கள்“ எனும் தலைப்பில் 3 நாட்கள் பயிற்சி பட்டறையை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா பாரதியார் பல்கலைக்கூட அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் பாரதியார் பல்கலைக்கூட நிர்வாகி பங்கஜ்குமார்ஜா, உறுப்பினர் செயலர் கணேசன், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

திருமுதுகுன்றம் பகுதியை சேர்ந்த ஓதுவார்மூர்த்தி சண்முக திருவரங்கயயாதி, விநாயக தணிகாசலம் ஆகியோர் இந்த பயிற்சி பட்டறையின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றனர். முன்னதாக இந்திராகாந்தி தேசிய கலை மண்டல மையத்தின் மண்டல இயக்குனர் கோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் இசைத்துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

இந்த பயிற்சி பட்டறை நடத்துவதன் நோக்கம் குறித்து விழாவில் கூறப்பட்டதாவது:-

1300 வருடங்கள் பழமை வாய்ந்த தேவாரப் பண்ணிசை பாடல்கள் மறைந்து வரும் நிலையில் உள்ளது. எல்லோருக்கும் தேவாரப் பண்ணிசை இன்பத்தை கொண்டு சேர்க்கும் வகையில்தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிய தேவார பண்ணிசை பாடல்களின் மூலமாக ஆன்மிக உணர்வையும் இதன் மூலம் தமிழ் இசையின் மாண்பை எல்லோரும் அறியும் வகையிலும் இந்த பயிற்சி அமையும்.

மேலும் பழமை வாய்ந்த மொழியான தமிழ் மொழியில் உள்ள இசை மரபுகளையும் அதன் மாண்புகளையும் மீட்டெக்கும் வகையில் இந்த பயிற்சி பட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 வயது முதல் உள்ள இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். புதுச்சேரி வரலாற்றில் சிறப்பு மிக்க தமிழ் பண்ணிசை தேவாரப் பாடல்கள் பற்றிய பயிலரங்கம் இதுவாகும்.

மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

3 நாட்கள் நடைபெறுகின்ற இந்த பயிற்சி பட்டறையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்