மயிலம் அருகே, லாரிகள் மோதல்; டிரைவர் பலி
மயிலம் அருகே லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
மயிலம்,
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரான்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முத்துக்குமார் (வயது 28), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து லாரியில் உளுந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டார்.
நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாதிராப்புலியூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, முன்னால் சென்ற லாரியை முத்துக்குமார் முந்திச் செல்ல முயன்றார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதியது. இதில் முத்துக்குமார் ஓட்டிச்சென்ற லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய முத்துக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான லாரிகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.