நண்பனை கொலை செய்த 2 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு
நண்பனை கொலை செய்த 2 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தேனி,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 40). இவரும், அதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டி (48), முத்துச்சாமிபுரத்தை சேர்ந்த பாண்டியன் (48) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.
பால்பாண்டிக்கு செல்வி, அழகுமணி என 2 மனைவிகள் உள்ளனர். இதில் செல்வியுடன் முத்தையா சிரித்துப் பேசியதை பால்பாண்டி பார்த்துவிட்டு, அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்டு உள்ளார். இந்த தவறான சந்தேகத்தால், முத்தையாவை கொலை செய்ய பால்பாண்டி திட்டம் தீட்டினார்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துச்சாமிபுரத்தில் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த கலைநிகழ்ச்சியை பார்ப்பதற்காக முத்தையா அங்கு சென்றார். கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, அதே ஊரில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் அவர் படுத்துத் தூங்கினார்.
அப்போது பால்பாண்டியும், பாண்டியனும் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் முத்தையாவை சரமாரியாக தாக்கினர். பின்னர், அங்கு சாக்கடையில் கிடந்த ஒரு பெரிய கல்லை தூக்கி, முத்தையாவின் தலையில் போட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி அழகேஸ்வரி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டி, பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் பால்பாண்டி, பாண்டியன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.