ஆளும் கட்சிகளுக்கு தாவல் தொடர்கிறது திலீப் சோபால் எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணைகிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான திலீப் சோபால் சிவசேனாவில் இணைய இருப்பதாக அறிவித்து உள்ளார்.

Update: 2019-08-26 23:30 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டுரங்க் பரோரா கடந்த மாதம் சிவசேனாவில் இணைந்தார். மேலும் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான சிவேந்திராசின் போசலே, சந்தீப் நாயக், வைபவ் பிச்சாத் ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர். இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவரான சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்தார்.

இவ்வாறு தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணையப்போவதாக அறிவித்து உள்ளார். அவர் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தொகுதி எம்.எல்.ஏ. திலீப் சோபால் ஆவார்.

இதுகுறித்து அவர் நேற்று சோலாப்பூரில் நிருபர்களிடம் கூறுகையில், “விரைவில் நான் சிவசேனாவில் இணைய உள்ளேன். அந்த கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்“ என்றார்.

திலீப் சோபால் முந்தைய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் கேபினட் மந்திரி பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிகளுக்கு தாவி வருவதால் கட்சியின் மூத்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொங்கன் பகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரசின் பலம்வாய்ந்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான பாஸ்கர் ஜாதவ் சிவசேனாவில் சேர இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு பாஸ்கர் ஜாதவ் மறுப்பு தெரிவித்து உள்ளார். இது வெறும் வதந்தி என்றும், தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரசிலேயே பணியாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சத்தாரா தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உதயன்ராஜே போசலே சமீபத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை புகழ்ந்து பேசினார். இதனால் அவர் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜனதாவில் சேருமாறு அவருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அழைப்பு விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்