ஊராட்சி, பேரூராட்சிகளில் தூய்மை பணிக்கான துப்புரவு கருவிகளை முறையாக வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் பணியாளர்கள் கோரிக்கை மனு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மை பணிக்கான துப்புரவு கருவிகளை முறையாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊராட்சி தூய்மை காவலர் பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கிராம ஊராட்சி பொது பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு மற்றும் தூய்மை காவலர் பணியாளர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும். நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதற்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். தூய்மைக்காவலர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் தூய்மை பணிக்கான துப்புரவு கருவிகளை முறையாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வாணியாறு அணை ஈழத்தமிழர் முகாமை சேர்ந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், கடந்த 1990-ம் ஆண்டு இலங்கை போர் காரணமாக வாணியாறு அணை பகுதிக்கு வந்த 220 குடும்பத்தினர் சுமார் 29 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அரசு அளிக்கும் உதவிகளை பெற்று தமிழக மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 363 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் சம்பந்தப்பட்ட துறை அலுலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.