கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள மற்ற அனைத்து கடைகளையும் இடித்து அகற்ற வேண்டும் என தி.மு.க. கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நகரில் சுமார் ரூ.7 கோடி செலவில் நாற்கரசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள 108 கடைகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள கடைகளை அதன் உரிமையாளர்களே அகற்ற வேண்டும். இல்லையெனில் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதற்கான செலவுத்தொகையை கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கடைக்காரர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கு தொடர்ந்தவர்களை தவிர்த்து, மற்ற 13 கடைகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த கடைக்காரர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. தொடர்ந்து சில கடைகளில் உள்ள பொருட்களை கடைக்காரர்களே அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. சில கடைகளில் இருந்த பொருட்களை நகரசபை துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் ஏற்றி சென்றனர். கட்டிட இடிபாடுகளை டிராக்டரில் ஏற்றி சென்று உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். மதியம் 3 மணி அளவில் 13 கடைகளும் அகற்றப்பட்டன.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ, நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி மற்றும் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பார்வையிட்டனர்.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), ஆவுடையப்பன் (கயத்தாறு), முத்துலட்சுமி (கழுகுமலை), சுகாதேவி (நாலாட்டின்புத்தூர்), பத்மாவதி (அனைத்து மகளிர்) மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி கோவில்பட்டி புது ரோடு சந்திப்பு, மார்க்கெட் ரோடு சந்திப்பு, எட்டயபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து, மாற்றுப்பாதை வழியாக வாகனங்களை அனுப்பினர்.
ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள மற்ற கடைகளையும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து கடைகளையும் அகற்றிய பின்னர் ஓடை முழுவதும் தூர்வாரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள மற்ற அனைத்து கடைகளையும் முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று மாலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் கருணாநிதி (தி.மு.க.), சரோஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஜோதிபாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), நகர தலைவர்கள் சண்முகராஜ் (காங்கிரஸ்), காஜா மீரான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.