போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸ் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-26 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு செல்போனில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், “நான் அறந்தாங்கியில் இருந்து பேசுகிறேன். பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு வைக்கப்போகிறேன்” என்றார்.

அத்துடன் அவர், போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து போலீசார், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

கைது

அதில், வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், வள்ளுவர் சாலையில் இருந்து அந்த மர்மநபர் மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராயலாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டில் குடிபோதையில் படுத்திருந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர், அறந்தாங்கியை சேர்ந்த அன்புராஜ்(வயது 48) என்பதும், ராமாபுரம், வள்ளுவர் சாலையில் உள்ள வீட்டில் தங்கி, கியாஸ் ஸ்டவ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை செய்து வருவதும் தெரிந்தது. அறந்தாங்கியில் தனக்கு சொந்தமான நில பிரச்சினையை போலீசார் தீர்த்து வைக்காததால் அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்ததாகவும், இதனால் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார். அன்புராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்