கீழடி அகழ்வாராய்ச்சி: பழங்கால குளியல் தொட்டி கண்டுபிடிப்பு

திருப்புவனம் அருகே கீழடி அகழ் வாராய்ச்சியில் குளியல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2019-08-26 23:45 GMT
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி ஊராட்சியில் உள்ள பல பகுதியில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இந்த ஆராய்ச்சியின் போது பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் ரூ.55லட்சம் செலவில் மாநில தொல்லியல் துறை சார்பில் 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதிலும் செம்பு நாணயங்கள், கத்தி, தாயக்கட்டைகள், உறைகிணறுகள் என பல பொருட்கள் கிடைத்தன.

தோண்ட தோண்ட பழங்கால பொருட்கள் கிடைத்த நிலையில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த மாநில அரசு ரூ.47லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது நடைபெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சி பணிக்காக விவசாயிகள் கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோர் நிலங்களில் பல குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது சிறிய பானை, ஓடுகள், பெரிய வட்டப்பானை, இரட்டைச்சுவர், நீளச்சுவர், சிறிய அடுக்கு கொண்ட குட்டிச்சுவர், உறைகிணறு, பெரிய செங்கல் சுவர் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. மேலும் எலும்புகள், பாசி மணிகள், ஓடுகள், பழங்கால எழுத்தாணிகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர் என தெரிய வருகிறது. விவசாயி முருகேசன் என்பவரது நிலத்தில் 8 உறைகள் கொண்ட உறைகிணறும் கண்டறியப்பட்டது.

கடந்த 4-வது கட்ட ஆராய்ச்சியின் போது உறைகிணற்றில் உள்ள உறையின் உயரம் 1 அடியாக இருந்தது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் 1½அடி வரை உயரம் உள்ளது. இதை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

தற்சமயம் முருகேசன் என்பவரது நிலத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்தபோது செவ்வக வடிவிலான குளியல் தொட்டி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சுமார் 5 அடி நீளமும், 3 அடி அகலமும் உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த தொட்டி செங்கற்களால் கட்டப்பட்டு கனமான தன்மை கொண்டதாக உள்ளது. தொட்டியின் உள்புறத்தின் அடிப்பகுதியில் கனமான செங்கற்கள் வைத்து மண் பூச்சு கொண்ட தளமாக அமைத்துள்ளனர்.

இதன் மூலம் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிட வடிவமைப்பில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும் பழங்காலத்தில் செங்கற்களை சுட்டு மண்பூச்சு கட்டிட பணிக்கு பயன்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் முருகேசனின் நிலத்தில் சேதமடைந்த நிலையில் அகலமான மண்பானை தோற்றம் கொண்ட உருவம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்