விவசாயிகளை தரக்குறைவாக நடத்திய போலீசார் மீது நடவடிக்கை: கலெக்டரிடம், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மனு

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை தரக்குறைவாக நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கலெக்டரிடம் அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மனுகொடுத்தனர்.

Update: 2019-08-26 23:30 GMT
திருப்பூர்,

உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளை தரக்குறைவாக நடத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வாவிபாளையம் கிராமத்தில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க அளவீடு செய்யும் பணி நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கான அளவீடு செய்ய அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர். அந்த நிலத்தில் வெங்காயம், அவரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்ததால் விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில், போலீசார் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். மேலும், குழந்தையுடன் அங்கு வந்த பானுமதி என்ற பெண்ணையும் கொடூரமாக தாக்கியதுடன், அவரை தூக்கி வெளியேற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர். சட்டவிதிகளை மீறி, விவசாயிகளின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசம் செய்ததோடு, விவசாயிகளை தரக்குறைவாக நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரனையும் பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இதே கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கொடுக்க சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் காங்கேயம் சிவன்மலை பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் என்னை அழைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி கடந்த 2-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்றேன். ஆனால், எனது ஆட்சேபனை குறித்து என்னிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை. இதனால் என்னுடைய நிலத்தின் வழியாக மின்கோபுரங்கள் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விவசாயி கந்தசாமி தான் கையில் கொண்டு வந்த, நிலத்தின் ஆவணங்கள் அடங்கிய பையை கலெக்டர் அமர்ந்திருந்த மேஜையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் கலெக்டர் அழைத்தும், அதை கண்டுகொள்ளாத அந்த விவசாயி அங்கிருந்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வேக வேகமாக அரங்கத்தை விட்டு வெளியேற முயன்றார். அரங்கத்தில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்