சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், 357 பேருக்கு உடனே பணி ஆணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தது.

Update: 2019-08-25 23:24 GMT
சென்னை,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்துடன், ‘நாங்கள் உங்களுடைய குரல்’ (வீ ஆர் யுவர் வாய்ஸ்) என்ற அரசு சாரா அமைப்பு இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. முகாமில் தென்னிந்தியாவை சேர்ந்த 5 ஆயிரத்து 500 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். தகவல்தொழில்நுட்பம், உற்பத்தி, சில்லரை வணிகம் மற்றும் ஓட்டல், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 135 கம்பெனிகள் பங்கேற்றன. வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காக 1,254 தன்னார்வலர்கள் களத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

வேலைவாய்ப்பு தேடி வந்தவர்களுக்கு சுயவேலைவாய்ப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இருப்பது குறித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் விளக்கம் அளித்து ஊக்கப்படுத்தினார்கள். 357 மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமிலேயே உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் 1,867 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முகாமில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ‘நாங்கள் உங்களுடைய குரல்’ அரசு சாரா அமைப்பு செய்வதாக அந்த அமைப்பின் நிறுவனர் காசிம் பாசித் தெரிவித்தார். இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் அசாம் மாநிலம் கவுகாத்தி, தமிழகத்தில் வேலூர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்