தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்: சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நெல்லை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவலையொட்டி நெல்லை மாவட்டத்தில் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என நெல்லை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2019-08-25 22:00 GMT
நெல்லை, 

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவலையொட்டி நெல்லை மாவட்டத்தில் சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாகன சோதனை தீவிரம்

நெல்லை மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புளியரை பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

சந்தேகப்படும் படியான நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசாரை வாகன சோதனையில் ஈடுபடுத்தி வருகிறோம். வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் வரவழைக்கப்படவில்லை.

இஸ்ரோ மையம்

பணகுடி மகேந்திரகிரி இஸ்ரோ மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். தேவைப்பட்டால் கூடுதல் போலீசாரை அனுப்பி வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்